நிறுத்த முறையானே அஃறிணை வினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள், தன்மைக்கண் கூற்று நிகழாமையானும், முன்னிலை விரவு வினையாதலானும், அஃறிணைக்கேயுரித்தாகி வருவது படர்க்கை ஆதலான், அது தெரிநிலை வினை, குறிப்பு வினை என இருவகைப்படுதலின், அவற்றுள், தெரிநிலை வினை உணர்த்துவார் முதற்பட அதற்கண் பலவறிசொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. அஃதற்றாக, கிளியும், பூவையும் தன்வினை உரைக்குமாதலின், அஃறிணைக்கண் தன்மைவினை இன்றென்றது என்னையெனின், கிளியும், பூவையும் ஆகிய சாதி எல்லாம் உரையாடும் என்னும் வழக்கின்மையானும், அவை உரைக்குங்கால் ஒருவர் உரைத்ததைக் கொண்டு உரைக்கும் ஆதலானும், ஒருவன்பாடின பாட்டை நரம்புக் கருவியின்கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக், கருவியும் உரையாடிற்றாதல் வேண்டுமாகலானும், அவ்வாறு வருவன மக்கள் வினையாதலால் தன்மைவினை யன்றென்க. யான் என்னும் பெயரை விரவுப் பெயர்க்கண் ஓதாது உயர்திணைக்கண் ஓதினமையானும் அஃறிணைக்கண் தன்மைவினை இன்றென்க. இ - ள். அ ஆ வ என்னும் ஈற்றினை உடைய அக்கூற்று மூன்று சொல்லும் அஃறிணைப் படர்க்கைக்கண் பன்மை உணர்த்தும் சொல்லாம், எ - று. அஃறிணை என்பது வருகின்ற சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது. எ - டு. உண்டன, உண்கின்றன, உண்பன; உண்ணல; உண்ணா; உண்குவ எனவரும். பிறவுமன்ன. (19)
|