அஃறிணை ஒருமைத் தெரிநிலை வினை முற்று

211.ஒன்றன் படர்க்கை1 தறட ஊர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்.

அஃறிணைப் படர்க்கைக்கண் ஒருமை உணரவரும் சொல்லாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அஃறிணையொன்றனை அறியவரும் படர்க்கை வினைச்சொல் த, ற, ட க்களை ஊர்ந்த குற்றியலுகரத்தினை ஈறாக உடைய, எ - று.

எ - டு. உண்டது, உண்ணாநின்றது, உண்பது, உண்ணாது; கூயிற்று; உண்டு எனவரும். உண்டு என்பது உண்டது என்னும் பொருட்டு. பிறவுமன்ன.

(20)


1. ‘த ட ற’ எனப் பாடங் கொள்வர் இளம்பூரணர்.