அஃறிணைக் குறிப்புவினை முற்றின் ஈறு

215.

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.

அஃறிணை வினைக்குறிப்பிற்குப் புறநடை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். மேல் ஓதிய வாய்பாட்டால், பால் விளங்க வந்தன வாய்ச் சொல்லப்பட்ட மரபினாற், குறிப்பொடு வரூஉம் வினைச் சொல் அஃறிணைத் தெரிநிலை வினையோடு வேறுபாடில, எ - று.

அதற்கு ஓதிய ஈறே, இதற்கும் ஈறென்பது பெற்றாம்.

எ - டு. உடைத்து இன்று, குண்டுகட்டு, குறுந்தாள, பொல்லா எனவரும்.

‘அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்’ என்றதனான், உருபும், பொருளும், வினையும் ஒற்றுமைப்பட்டு வருவனவும், உயர்திணை வினைக்கண் ஓதிய இடமும், வன்மையும் பற்றி வருவனவுங் கொள்க. முதற்று, முதல என்பன உருபும், பொருளும், வினையும் ஒற்றுமைப்பட்டன. மேற்று. மேல; மாடத்தது, மாடத்த என்பன இடம் பற்றி வந்தன. ஓடவற்று, ஓடவல்ல; ஓடவல்லாது, ஓடவல்லா என்பன வன்மைபற்றி வந்தன. பிறவுமன்ன.

(24)