முன்னிலை வினைச்சொல்லுள் ஒருமை உணர்த்தும் ஈறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் முன்னிலைக் கிளவிக் கண் இ, ஐ, ஆய் என்று வரும் ஈற்றினை யுடைய மூன்று சொல்லும் உயர்திணை ஆண்பாற்கும், பெண்பாற்கும், அஃறிணை ஒன்றன்பாற்கும் ஒத்த இயல்பினவாகித் தோன்றும், எ - று. முன்னிலை வினையென்னாது முன்னிலையெனப் பொதுப்பட ஓதினவதனால், அச்சொல் இருவகைப்படும்: முன் நின்றான் தொழில் உணர்த்துவனவும், அவனைத் தொழிற் படுத்தற்கு ஏவல் குறித்து வருவனவுமென. எ - டு. உண்டி, உண்கிற்றி; உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை, உண்பை; உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய், உண்ணாய்; கருத்தி, கரியை, கரியாய் என்பன முன்னின்றான் தொழில் உணர்த்தின. இவற்றுள் ஆய் என்பது மறையினும். ஏவலினும், தொழிலினும் வரும். உண்டி என்பது தொழிலினும் ஏவலினும் வரும். பிறவுமன்ன. அஃதேல், நட, வா, அறி, ஈ, கொடு, தூ, ஏ, வை, போ, கௌ எனவும்; செல், கொள், உண், தின், கூட்டு எனவும் உயிரீறும் ஒற்றீறுமாகிப் பலவகையான் வருவன எல்லாம் ஓதாது முன்னிலைச்சொல் மூன்றென்றது என்னை யெனின், அவை எல்லாம் ஆய் என்னும் சொல் குறைந்து நின்றன. அன்னவாதல் 2செய்யா யென்னும் முன்னிலை வினைச்சொல்; செய்யென் கிளவி யாகிட னுடைத்தே என்பதனுட் கண்டுகொள்க. (26)
1. ‘ஒருவற்கும்’ என்பது இளம்பூரணர் பாடம். 2. எச்சவியல்--51.
|