முன்னிலைப் பன்மை வினைமுற்று

218.

இர் ஈர் மின்என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல்லோ ரனைய
1என்மனார் புலவர்.

முன்னிலை வினைச்சொல்லுள் பன்மை உணர்த்தும் ஈறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இர் ஈர் மின் என்று சொல்லப்பட்ட மூன்றீற்று வினைச்சொல்லும் உயர்திணைப் பன்மைக் கண்ணும், அஃறிணைப் பன்மைக் கண்ணும் சொல் நோக்கொக்கும். எ - று.

எ - டு. உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்பிர்; உண்டீர், உண்ணா நின்றீர், உண்பீர்; உண்மின், உண்ணலிர், உண்ணீர், உண்ணன்மின் எனவரும்.

இவை உணர்த்துமாறு என்னை எனின், இவ்வினைக்குப் பெயராகிய நீ, நீயிர் என்பனவற்றிற்கு, 2இன்ன பெயரே இவையெனல் வேண்டின், முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல் என விதித்தாராகலான் ஆண்டை விதியே ஈண்டுங் கொண்டு சொல்லுவான் குறிப்பினானும் தொடர்வுபட்ட பெயரினானும் உணர்ந்து கொள்க. உண்டாயோ மகனே உண்டாயோ மகளே என்றவழி உயர்திணை உணரப்பட்டது. உண்டாயோ குயிலே என்றவழி அஃறிணை யுணரப்பட்டது. உண்டீரோ மக்காள் என்றவழி உயர்திணை உணரப்பட்டது. உண்டீரோ கிளிகாள் என்றவழி அஃறிணை உணரப்பட்டது. உண்டீரோ மக்காள் என்றவழி ஆண் பன்மை பெண் பன்மை விளங்கல் வேண்டின் அதனோடு தொடர்ந்த சொல்லான் உணர்க.

(27)


1. என் .........வர். இப்பகுதிக்கு உரையில்லை.

2. பெயரியல்--37.