முன்னிலை யொழிந்த சொற்கள் பால் உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். மேற்சொல்லப்பட்ட முன்னிலை ஒழிந்த சொற்கள்1 மூன்றிடத்தோடும் கூடி ஐந்துபாற்குமுரிய, தோன்று நெறிக்கண் எ - று.
அவற்றுள், சிறப்பு விதியுடைய வியங்கோட்கும், வினையெச்சத்திற்கும், செய்யும், செய்த என்னும் சொற்கும் உதாரணம் தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். ஏனை ஈண்டுக் காட்டப்படும்.
எ - டு. இன்மை செப்பல் என்பது இல்லை என்னுஞ் சொல். அது யானில்லை, யாமில்லை; நீயில்லை, நீரில்லை; அவனில்லை, அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவையில்லை எனவரும்.
வேறென் கிளவியாவது வேறென்னும் சொல். அது, யான் வேறு, யாம் வேறு; நீ வேறு, நீயிர் வேறு; அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு எனவரும்.
வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், கூட்ட என்பதூஉம், ஆம் என்பதூஉம் கொள்க. யான் கூட்டு, நீ கூட்டு; யான் ஆம், நீயாம் அவர் கூட்டு, அவர் ஆம் என மூன்றிடத்துக் கண்ணும் ஒட்டுக.
செய்ம்மன என்பது, யான் செய்ம்மன, நீ செய்ம்மன, அவன் செய்ம்மன என எல்லாப் பாலோடும் ஒட்டுக. இது இக்காலத்துச், செய்வது, செய்வன, செய்பவை, செய்யுமவை என வழங்கும் போலும்.
(28)
1. வினையி. சூ--25.