எய்தியது ஒருமருங்கு விலக்குதலை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லபட்டவற்றுள் வியங்கோள் சொல் முன்னிலையும் தன்மையுமாகிய இடத்து நிலைபெறா, எ - று. எனவே; படர்க்கை ஐந்து பாற்கண்ணும் வரும் என்றவாறாம். வியங்கோள் என்பது யாதோ எனின், செய்க என்னும் பொருட்கண்ணும், தவிர்க என்னும் பொருட்கண்ணும், வேண்டிக் கோடற் பொருட்கண்ணும் வருவது. அஃதாவது வாழ், உண், தவிர் என்னும் ஏவல் குறித்த சொற்கள், தன்மைப் பெயர்க்கண்ணும், படர்க்கைப் பெயர்க்கண்ணும் ஏலாது முன்னிலை ஒருமைப் பெயர்க்கண், நீ வாழ், நீ யுண், நீ தவிர் என ஏற்றலின், ஆண்டுப் பாலுணர்த்துஞ் சொல்லோடு ஒரு நிகரனவாகி முன்னிலை வினையுள் அடங்கின. அப்பொருட்கண், தன்மை கூறும் வழி, யான் வாழ்வல், உண்பல், தவிர்வல் எனக் கூறவேண்டலின் அவை தன்மை வினையுள் அடங்கின. இனிப் படர்க்கைக்கண் வருங்கால், அவன் வாழ்க, உண்க, தவிர்க எனக் ககரம் கடையாத்துக் கூறவேண்டுதலின், அவ்வாறு வருஞ்சொல், பாலுணர்த்தாமையின் வியங்கோள் என வேறு குறி பெற்றது. அவன் வாழ்க, அவள் வாழ்க, அவர் வாழ்க, அது வாழ்க, அவை வாழ்க என ஐந்து பாற்கும் உரித்தாகி வந்தவாறு கண்டு கொள்க. நீ வாழ்க, உண்க எனவும் வருமாலெனின், அவை அக்ககரம் பெறாக்காலும் பொருள் இனிது விளங்குதலின் அவ்வாறு வருவன மரூஉ வழக்கென்று கொள்க. கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர் எனச் செய்யுளகத்தும் வந்ததாலெனின் நீ கடாவுக என வாராது, பாக கடாவுக என வருதலின், அது படர்க்கைப் பெயர் விளியேற்றவழி வந்த தென்க. 1என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுள் எனத் தன்மைக்கண் வந்ததாலெனின், ஆண்டுக் கெடுக எனப்பட்டது ஆயுளாதலின் அதன்மேல் வந்த தென்க. இனி, அவ்வியங்கோட் கிளவி ஈறு திரிந்து வந்து அப்பொருள் படுதலுங் கொள்க. 2வாழிய வென்னுஞ் 3செய்யென் கிளவி--யிறுதி யகரங் கெடுதலு முரித்தே என்றமையான் வாழ்க என்பது வாழி, வாழிய, வாழியர் எனவும்; 4செப்பும் வினாவும் வழாஅ லோம்பல் என்றமையான், ஓம்புக என்பது அல் ஈறாகி வருதலுங் கொள்க. 5மகனெனல் மக்கட் பதடியெனல்’ என்றமையான் உடம்பாட்டினும், மறையினும் அல்லீறு வருதலுங் கொள்க. 6ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை--யாஅது மென்னு மவர் என்பது பல்லோர் படர்க்கை யாதலின், வேண்டும் என்னும் முற்றுச் சொற் கொண்டு முடியாமையின், ஆக்கங் கருதுவார் இவ்வாறு செய்தல் வேண்டுமென வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் வந்தது. | “திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் இசைபரந் துலகேழ்த வேதினாட் டுறைபவர்” | (கலி-பாலை-26.) |
என்றவழி, ஏதினாட்டுறைபவர் அருளுவாராக என வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் ஈறுதிரிந்தது. பிறவுமன்ன. (29)
1. சிலப் - வழக்--77. 2. எழுத்-உயிர்மய-9. 3. செய்; செய--ஏனையுரைப்பாடங்கள். 4. கிளவி-13. 5. குறள்--996. 6. குறள்--653.
|