செய்யும் என்னும் முற்றுப் பொருந்தாத இடம்

221.

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றாம் நிகழுங் காலத்துச்
செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா.

இதுவும் எய்தியது ஒருமருங்கு மறுத்தலை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். பலரை உணர்த்தும் படர்க்கையும், முன்னிலையும், தன்மையுமாகிய மூன்றிடமும் நிகழ்காலங் குறித்த செய்யும் என்னுங் கிளவியொடு பொருந்தா, எ - று.

ஈண்டும் இவ்வாறோதி; முன்னும் 1அவ்வாறு பொருட்கும் ஓரன்ன உரிமைய--செய்யும் செய்த என்னுஞ்சொல்லே எனவும் ஓதினமையாற் செய்யும் என்பது முற்றும் பெயரெச்சமும் என இருவகைப் படுமென்று கொள்க. அது முற்றாயுழித் தன்மையினும், முன்னிலையினும் உயர்திணைப் படர்க்கைப் பன்மையினும் வாராது, ஏனைப்பாலின்கண்ணே வரும் என்றவாறாம். அவனுண்ணும்; அவளுண்ணும், அது உண்ணும், அவையுண்ணும் என வரும். ஈண்டு நிகழ் காலங் குறித்த தென்னை; எதிர்காலங் குறித்து வாராதோ எனின், எதிர்காலத்துக்கண் வருவது காலமயக்கமாகக் கொள்க. முற்றுச் சொல் சேரக் கூறுகின்றாராகலின் இச்சூத்திரம் ஈண்டோதப்பட்டது.

(30)


1. வினையியல்--37.