வினையெச்ச வாய்பாடுகள்

222.

செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.

வினையெச்சம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். செய்து என்பது முதலாகச் செயற்கு என்பதீறாக ஓதப்பட்ட ஒன்பது வாய்பாடும் வினையெச்சச் சொல்லாம், எ - று.

வினையெச்சமாவது மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப் பெறாது நிற்கும். வினைச்சொல்லாவது பாலுணர்த்தாது காலங் காட்டி நிற்கும். செய்து என்பது இறந்த காலங் காட்டும். செய்யூ என்பது இறந்தகாலமும் நிகழ்காலமும்

காட்டும். 1செய்யா யென்னும் வினையெஞ்சு கிளவியும் என எழுத்ததிகாரத் தோதுதலின், அவ்வாய்பாடும் இப்பொருட்டாகி வருதலின் அதுவுங்கொள்க. செய்பு என்பது மூன்று காலமுங் காட்டும். செய்தன என்பது இறந்த காலப் பொருட்டாயினும் விரைவு குறித்தலானும், திரிந்து முடிதலானும் பொருள் வேறுபாடு உடைத்தாதலான் வேறோதப் பட்டது. செய்யியர் என்பது எதிர்காலங் காட்டும். செய்யிய என்பது வாய்பாடு வேற்றுமை யுடைத்தாதலான் பொருள் நோக்காது சொல் நோக்கிக் கூறப்பட்டது. செயின் என்பது எதிர்காலம் பற்றி வரினும் பொருள் வேறுபாடுடைத்தாதலான் வேறோதப் பட்டது. செய என்பது மூன்று காலத்திற்கும் பொதுவாகிப் பொருள் வேறுபாடு உடைத்து. செயற்கு என்பது எதிர்கால வாய்பாட்டு வேற்றுமை குறித்து ஓதப்பட்டது. உதாரணம் வருகின்ற சூத்திரங்களுட் காட்டுதும்.

(31)


1. உயிர் மயங்கியல்-20.