செய்து, செய்யூ, செய்பு என்பவற்றிற்கு முடிபு

224.

அவற்றுள்,
முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின.

நிறுத்த முறையானே முந்துற்ற மூன்றிற்கும் முடிபுணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் முந்துற்ற மூன்று சொல்லும் அவ்வினைக்குக் கருத்தாவாகிய பொருளின் வினையை முடிபாக உடைய, எ - று.

எ - டு. உண்டு வந்தான்--இது செய்தென் எச்சம். 1படுமகன் கிடக்கை காணூஉ--வீன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. இஃது இறந்த காலங் குறித்த செய்யூ என்னும் வினையெச்சம். நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சரம்--இது நிகழ்காலம் குறித்த செய்யூ என்னும் வினையெச்சம். 2வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்-இது செய்யா என்னும் வினையெச்சம். 3புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த என்பது இறந்தகாலம் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். 4வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர என்பது நிகழ்காலங் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். உண்பு வந்தான்--இது எதிர்காலங் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். மூன்றிடத்து ஐந்து பாலோடும் ஒட்டிக்கொள்க.

(33)


1. புறம்.-278.

2. நாலடி-கடவுள் வாழ்த்து.

3. புறம்-33.

4. கலி-16.