எய்தியதன் மேற் சிறப்பு விதி

225.

அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிச்1
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினையோ ரனைய என்மனார் புலவர்.

எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல்
நுதலிற்று. வழுவமைதியுமாம்.

இ - ள். மேற்சொல்லப்பட்ட மூன்று சொல்லும் சினை வினையாகித் தோன்றி, அச் சினைவினையோடு முடியாது, முதல் வினையோடு முடியினும், அச்சினைவினையான் முடிந்ததனோடு ஒக்கும், எ - று.

எ - டு. கையிற்று வீழ்ந்தது, கையிறூஉ வீழ்ந்தது, கையிறுபு வீழ்ந்தது எனற்பாலன கையிற்று வீழ்ந்தான், கையிறூஉ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் என வீழப்பட்டது கையாயினும், அதனோடு முடியாது அதன் முதல்வினையோடு முடியினும் குற்றமில என்றவாறு.

உய்த்துணர வைத்தல் என்னும் தந்திர உத்தியால் வினை யெச்சத்திற்கு முடிபாகி வரும் சினைவினை முதலொடு முடிதலேயன்றித் தனிவருஞ் சினை வினையும் முதலோடும் முடியுமென்று கொள்க. கையிற்றான், கண் கெட்டான் எனவரும்.

(34)


1. தோன்றில்--ஏனையுரைப் பாடம்.