ஏனையெச்சங்கள் இருவகை வினையும் கொண்டு முடியும் என்பது

226.

ஏனை யெச்சம் வினைமுத லானும்
ஆன்வந் தியையும் வினைநிலை யானும்
தாமியல் மருங்கின் முடியும் என்ப.

ஏனை எச்சங்கட்கு முடிபுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வினையெச்சங்களுள் முந்துற்ற மூன்று மல்லாதன வினைமுதல் வினையானும், அவ்விடத்துப் பொருந்தும் பிறவினையானும் தாம் நடக்கும் மருங்கினான் முடியும், எ - று.

எ - டு. மழை பெய்தெனப் புகழ் பெற்றது, மழை பெய்யியர் எழுந்தது, மழை பெய்யிய எழுந்தது. மழை பெய்யிற் புகழ் பெறும், மழை பெய்யப் புகழ் பெற்றது-இவை இறந்தகாலம். வாழச் செய்த நல்வினை யல்லா, தாழுங் காலைப் புணை பிறிதில்லை--இது வாழாநிற்கவென நிகழ்காலங் குறித்தது. மழை பெய்ய எழுந்தது--இது எதிர்காலம். மழை பெயற்கெழுந்தது. இவை வினை முதல் வினையான் முடிந்தன.

மழை பெய்தென மரங் குழைத்தது. மழை பெய்யியர் மாதவர் அருளினர். மழை பெய்யிய மாதவரருளினர். மழை பெய்யிற் குளம் நிறையும். மழை பெய்யக் குளம் நிறைந்தது--இவை இறந்தகாலம். மழை பெய்ய வந்தான். இது நிகழுங் காலம். மழை பெய்யப் பலி கொடுத்தும், இது எதிர்காலம். மழை பெயற்கு அறஞ்செய்தும், இவை பிற வினையான் முடிந்தன.

தானுண்டபின் வந்தான், தானுண்ணாமுன் வந்தான். தானுண்டக் கால் வரும்--தானுண்டக்கடை வரும்--இஃது இறுதி என்னும் காலங் குறித்து நின்றது. தானுண்டவழி வரும், இதுவும் அது. தானுண்ட விடத்து வரும், இஃது உண்டக்கால் என்பது குறித்தது. இவை தன்வினை. பிறன் உண்டபின் வரும். பிறனுண்ணாமுன் வரும். பிறனுண்டக்கால் வரும். பிறனுண்டக்கடைவரும். பிறனுண்டவழி வரும். பிறனுண்டவிடத்துவரும். இவை பிறவினை. இவை பெயராதற்கும் ஏற்று நிற்றலின். அந்நிலையின்றித் தொழில் நிகழுங் காலத்தைக் குறித்து வரின் வினையெச்சமாம் என்பதனாற் காலங் கண்ணிய என்று ஓதினார்.

அன்னமரபினாற் கொள்ளப்படுவன:--1அற்றா லளவறிந் துண்க. 2அலைப்பான் பிறிதுயிரை யாக்கலும் குற்றம். 3நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே. 4கூறாமற் குறித்ததன் மேற் செல்லும் 5கூறாமை நோக்கிக் குறிப்பறிவான். செவ்வன் தெரிகிற் பான். 6விருந்தின்றி உண்ட பகலும் 7நாளன்று போகிப் புள்ளிடை தட்ப.இனிக்கொண்டா(ன்) அணி வந்தான். நனி வந்தான். பிறவும் இவ்வாறு வருவன கொள்க.

(35)


1. குறள்-943.

2. நான்மணி-26.

3. கலி, குறி-3.

4. கலி-1.

5. குறள்-701.

6. திரிகடுகம்-44.

7. புறம்-124.