பெயரெச்சம்

228.நிலனும் பொருளும் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்கும் ஓரன்ன வுரிமைய
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.

செய்யும், செய்த என்னும் சொற்கு முடிபு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். நிலப்பெயரும், பொருட்பெயரும், காலப்பெயரும், கருவிப் பெயரும், வினைமுதற் பெயரும், வினைப் பெயருமாகிய அவ்வாறு பெயர்க்கும் ஒத்த உரிமைய: செய்யும், செய்த என்னும் சொற்கள், எ - று.

இவற்றோடு முடியும் எனவே, இவை பெயரை எச்சமாக உடையவாதலாற் பெயரெச்சமெனக் குறியும் பெறும். இவையும் பால்காட்டா என்றுணர்க.

இவை 1எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி என்பதின் அடங்காவோ எனின், ஆண்டு வினை முதல் தானே மூன்றிடத்து ஐந்து பாலுமாகி வரும். இவை அவ்வாறு அன்றிச் செயப்படு பொருளோடும், செயலோடும், கருவியோடும், இடத்தோடும், காலத்தோடும், வினைமுதலோடும் ஒத்த இயைபினவாகி முற்றுப்பெறுதலின் அடங்காவென்க. உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும்.

(37)


1. சூ. 28.