செய்யும் என்பதற்கு ஓர் முடிபு வேற்றுமை

229.

அவற்றொடு வருவழிச் 1செய்யும் கிளவி
முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே.

எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். செய்யும் என்னும் சொல் நிலம் முதலாகிய பொருளொடு வருவழி, முற்பட வரையப்பட்ட பல்லோர் படர்க்கையும் முன்னிலையும், தன்மையும் ஆகிய மூன்று வேறுபாட்டினும் உரித்து, எ - று.

எ - டு. நிலம்--உண்ணுமில், உண்ட இல். பொருள்--உண்ணுஞ் சோறு, உண்ட சோறு. காலம்--உண்ணும் காலம், உண்ட காலம். கருவி--உண்ணுங் கலம், உண்ட கலம். வினை--உண்ணும் ஊண், உண்ட ஊண், வினை முதல் மூன்றிடத்து ஐந்து பாலுமாகி ஒன்பது வகைப்படும். உண்ணும் யான், யாம்; நீ, நீயிர்; அவன், அவள், அவர், அது, அவை என வரும். செய்த என்பதும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. கருவி என்பதனால் மூன்றாவதற்கு ஓதிய காரணமும், ஏதுவும் கொள்க.

வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனால், நிலம்பூத்த மரமிசை நிமிர்பாலும் என்றவழி நிலம் பொலிவு பெற்ற மலர் என்று பொலிதற்கு ஏதுவின்கண் வந்தது. யானோ கொடுக்கும் பார்ப்பான் எனவும், ஒலிக்கக் கூலி எனவும் நான்காவதற்கு ஓதிய கொள்வதனோடும், பயனோடும் வருமாலெனின், கொடுக்கும் பார்ப்பான் என்றவழிக் கொடைத்தொழில் பார்ப்பான் மேலேறுதலின், யானோ கொடுப்பக் கொள்ளும் பார்ப்பான் எனப் பொருள் உரைக்க வேண்டுதலின், அது வினைமுதலாம். ஒலிக்கக் கூலி என்றவழி, கூலியாவது பயனாதலின் அதற்குப் பொருள் உரைக்குங்காலை, ஒலித்தற்குக் கூலி என உரைக்கவேண்டுதலின், ஆண்டு அதற்கென்பது புலப்படாது நின்றதல்லது கூலி யென்பதனோடு பொருத்த மின்றென்க. இவையிற்றை மரூஉ வென்று கொள்ளப்படும்.

அஃதற்றாக, வினையெச்சம் பெயரெச்சம் என்பன தனிமொழி ஆதலின்றி, வினையோடும் பெயரோடும் முடிதலான், அவற்றைத் தொடர் மொழி கூறுகின்றவழிக் கூறல் வேண்டும் எனின், ஈண்டுச் செய்து, செய்யூ எனவும், செய்யும், செய்த எனவும் தனிமொழி இலக்கணமே கூறிற்றென்க. அன்றியும் முடிக்குஞ் சொல்லும் ஈண்டு ஓதப்பட்ட தாயினும், உண்டுவந்தான் என்றவழிச் சாத்தன் என்று ஒரு பெயரோடல்லது முற்றுப் பெறாமையானும், உண்ட சாத்தன் என்றவழி, வந்தான் என ஒரு வினையோ டல்லது முற்றுப் பெறாமையானும், இவையும் தனிமொழிப் பகுதி யெனி னல்லது வாக்கியமாகி முற்றி நிற்குந் தொடர் மொழியாகா வென்க.

(38)


1. செய்யுமென் கிளவி-ஏனையுரைப்பாடம்.