மேற் சொல்லப்பட்ட இருவகைப் பொருட்கண்ணும் ஐயக்கிளவி யுணர்த்துகின்றாராகலின், இச்சூத்திரம் அதன்பகுதியாகிய பால் ஐயம், திணையையம் என்னும் இரண்டனுள்ளும்
பால் ஐயம் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். தானறிந்த பொருட்கட் பான்மயக்குற்ற ஐயப் பொருண்மையைப் பன்மையாற் கூறுக, எ - று.
தானறிபொருள் என்றமையால் திணையறிந்து பால் அறியாதவழி என்பது பெறப்பட்டது. பால் ஐயம் பெருவழக்கிற்று ஆதலின் முற்கூறப்பட்டது. சேய்மைக்கட் டோன்றுவதோர் மக்கட்பிழம்பு கண்டு, ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ என ஐயுற்றான் அதனைத் தோன்றுவான் எனவும் ஆகாது, தோன்றுவாள் எனவும் ஆகாது, ஆயிடைத் தோன்றுவார் என்க. பைங்கூழ் அழிவு கண்டான் ஒன்றுகொல்லோ பல கொல்லோ செய்புக்கன என்க.
(23)