இருவகை யெச்சத்திற்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பெயரெச்ச வினைச்சொல்லும், வினையெச்ச வினைச் சொல்லும் எதிர் மறுத்து மொழியினும் தத்தம் பொருணிலைமையிற்றிரியா, எ - று. எ - டு. உண்ணாச் சாத்தன், உண்ணாத சாத்தன், எறியா வேல் என்பன செய்யும், செய்த என்னும் இரண்டினும் வரும் மறை. பிறவு மன்ன. உண்ணாது வந்தான், மழை பெய்யாமையின் மரம் வறந்தன. இவை வினையெச்சமறை. பிறவுமன்ன. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து வரும் என்றோதி, முற்றுச் சொல் எதிர்மறுத்து வரும் என ஓதாதது என்னை எனின், பெயரெச்சமும் வினையெச்சமும் ஓதுகின்றுழி உட்பட்ட சொல்லான் ஓதுதலின், எதிர்மறை ஓதல் வேண்டிற்று. முற்றுச் சொற் கீற்றெழுத்தோதினமையான் அவைதாமே மறுத்த வாய்பாட்டிற்கும் ஈறாதலின் ஓதல் வேண்டாவாயின. அஃதற்றாதல் அ, ஆ, வ என்னும் (சூ.19.) சூத்திரத்தானும் அறிக. (39)
|