இதுவும் இருவகை எச்சத்திற்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பெயரெச்சமும், வினையெச்சமும் தம்மை முடிக்கும் சொல்லோடு சிவணும் குறிப்பினை யுடைய யாதானும் ஒரு சொல்லாயினும் இடை நிற்றலை நீக்கார் ஆசிரியர், எ - று. எ - டு. கொல்லுங் காட்டுள் யானை, கொன்ற காட்டுள் யானை இவை பெயரெச்ச இடைக் கிடப்பு. இவற்றுள் இடைக் கிடந்த சொல் யானை என்பதனோடு சிவணுதலின் அமைக்கப்பட்டது. பிறவுமன்ன. உழுது ஏரொடு வந்தான், உழ ஏரொடு வந்தான்--இவை வினையெச்ச இடைக் கிடப்பு. இவற்றுள் இடைக்கிடந்த சொல் முடிக்குஞ் சொல்லொடு சிவணுதல் அமைதியாயிற்று. பிறவுமன்ன. இனிச் சிவணாதன:--உண்ட சாத்தன் தந்தை என்பது உண்ட என்பதற்குச் சாத்தன் தந்தையை முடிபாகக் குறித்தானாயிற் சிவணாதாயிற்று. வினையெச்சத்துட் சிவணாதன வந்தவழிக் கண்டு கொள்க. (40)
|