வினைச் சொற்கண் வரும் கால மரபு

233.

செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திடன் உடைத்தே வாராக் காலம்.

ஒருசார் வினையெச்சத்திற்கு வருங் கால மரபு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். செய்தென் எச்சத்துக்கண் வரும் இறந்தகாலம் எதிர்காலத்தைப் பொருந்து மிடனுடைத்து, எ - று.

என்றது, இறந்த காலத்தாற் கூறப்படும் வினையது நிகழ்ந்துழிக் கூறுதலன்றி, நிகழாத முன்னும் அவ்வாய்பாட்டான் வரப்பெறும் என்றவாறாம். நாளை உழுது வருவன்: இனித் தவம் செய்து சுவர்க்கம் புகும் என வரும்.

(42)