ஒருசார் வினைச்சொற்கள் தொழிற்கும் பண்பிற்கும்
பொதுவாகி வரும் எனல்

236.

மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வது இல்வழி நிகழுங் காலத்து
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே.

ஒருசார் வினைச்சொற்கு உரியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மிக்கது என்பது ஒன்றி னொன்று மிக்கது என்னும் பொருண்மை. அதன் மருங்கின் வினைச்சொல் சுட்டலாவது அது பெயராகி நிற்கும் நிலைமையைச் சுட்டாது வினையாகி நிற்கும் நிலைமையைச் சுட்டி நிற்றல். அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவியாவது அப் பொருட்கண் மிகுதலாகிய தொழிலைக் குறியாது அதன் இயல்பாகிய மிகுதியைக் குறித்த பாலுணர வருஞ்சொல். செய்வதில்வழி என்பது அப்பாலுணர வருஞ் சொல்லின்கண் கருத்தாவை உணர்த்தும் ஈற்றெழுத்து இல்வழி, என்றவாறு. நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டாகும் என்பது நிகழுங் காலத்து உருபு பெறப் புலப்படும் பொருளை உடைத்து, எ - று.

ஒரு பொருளின் ஒரு பொருள் மிக்கது என்னும், பொருட்கண் வரும், மிக்கது என்னும் வினைச்சொல்லைக் குறித்து மிகுந்த பண்புணர வரும் பாலுணர்த்தாத சொல் செய்யும் என்னும் சொல்லினான் வரின், அஃது அப்பொருளை இனிது விளக்கும், எ - று. மிக்கது என்பது ஒருகாலங் குறித்து வரின் தொழில் குறித்ததாம். இயல்பு குறித்ததாயின் பண்பு குறித்ததாம். ஆற்றில் நீர் மிக்கதென்ற வழி, மிகுதல் இயல்பன்மையில் தொழில் குறித்ததாம். சுவர்க்கம் மிக்கது என்றவழி எக்காலத்தும் ஒக்குமாதலின் பண்பு குறித்ததாம். பூமியிற் சுவர்க்கம் மிகும் எனவும் ஆம். யாற்றுநீர் மிக்கது என்னும் பொருட்கண் மிகும் என்றதனாற் குற்றம் என்னையெனின், அவ்வாறு கூறின் இறந்த காலம் தோன்றாதாம். வந்தது கண்டு வராதது முடித்தல் என்பதனால் உயர்வு, தாழ்வு, குறைவு என்பனவும் இந்நிலைமைய என்று கொள்க. இச்சூத்திரத்தாற் பயன் ஒருசார் வினைச்சொற்கள் தொழிலுக்கும், பண்பிற்கும் பொதுவாகி நிற்கும் என்பதறிவித்தல்.

(45)