கால வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். எதிர் காலத்து நிகழும் வினைச் சொல் இறந்தகாலத்தானும் நிகழ் காலத்தானும் பொருள் விளங்கத் தோன்றும்: ஓர் இயற்கையையும், ஒரு பொருளினது தெளிவையும் கிளக்குங் காலத்து, எ - று. எ - டு. ஆறலை கள்வர் இயங்குவதோர் காட்டிடைப்போக லுற்றானை, அவ்விடத்துப் போகுவையாயின் கூறை கோட்படுவை எனற்பாலான், பட்டாய் எனவும், படாநின்றாய் எனவுங் கூறும். இது இயற்கை. சென்றது சென்றது வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. (நாலடி.4). வாழ்நாள் செல்லாநின்றது எனற்பாலது சென்றது எனவும். கூற்று வரும் எனற்பாலது வந்தது எனவும் நிகழ்காலமும் எதிர் காலமும் இறந்தகாலத்தான் வந்தன. வாழ்நாள் செல்லுதலும் கூற்று வருதலும் ஒருதலை யாகலின், இவை தெளிவுபற்றி வந்தன. நிகழ்காலத்தான் வருவன வந்தவழிக் கண்டுகொள்க. (48)
|