வினைச் சொற்கள் வரும் காலவழுவமைதி

241.

இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி.

காலமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று

இ - ள். மயங்குதற்குரிய மொழிக்கண் இறந்தகாலமும் எதிர்காலமும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு காலமும் ஒப்பத்தோன்றும், எ - று.

எ - டு. உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே என்றவழி, என்றார் எனற்பாலது என்மனார் என வந்தது. பிறவுமன்ன.

(50)