இதுவும் அது

242.ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்,

இதுவும் அது

இ - ள். இறப்பும் எதிர்வும் தம்முள் மயங்குதலன்றி அவற்றோடு நிகழ்காலமும் மயங்கப்பெறும், எ - று.

எ - டு. யாம் விளையாடுங் கா என்றவழி முன்பு விளையாடுங் கா, இன்று விளையாடுங்கா, நாளை விளையாடுங் கா என மூன்று காலத்துக்கண்ணும் வந்தவாறு கண்டுகொள்க.

(51)

அஃதேல், வினைச்சொற்கள்--முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத்தன்மைய என்று எடுத்தோதி, முற்றுச்சொல்லாவது இத்தன்மையது என்று ஓதிற்றிலர்,அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்றதென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற் றன்று. அஃதேல், வினையிலக்கணம் அறிந்தேனாகுங்கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே. அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின், உரைக்குமாறு:--