இடைச்சொல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். “அவைதாம் புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்ருதநவும்” என்பது மேற் சொல்லப்பட்ட இடைச்சொற்கடாம் ஒரு சொல்லொடு ஒருசொல் புணர்ந்தியலும்வழி, அப்பொருள் நிலைக்குதவியாகி வருவனவும் என்றவாறு. பொருள்நிலைக்கு உதவலாவது அவ்வழிப் பொருட்கு உரியன இவை, வேற்றுமைப் பொருட்கு உரியன இவையென வருதல். அவையாவன இன்னே, வற்றே என்பன முதலாயின. அவை சாரியை யன்றோ எனின், அவை இடைச்சொல் எனவும் ஒரு குறி பெறும் என்றவாறு. ‘வினை செயல் மருங்கிற் காலமொடு வருநவும்’ என்றது வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலங் காட்டுஞ் சொல்லோடு பால் காட்டும் சொல்லும் என்றவாறு. அவையாவன உண்டனம், உண்டாம், உண்ணாநின்றனம், உண்கின்றனம், உண்பம், உண்குவம் என்புழி. இறந்தகாலங்குறித்த டகரமும், நிகழ்காலங் குறித்த நின்று, கின்று என்பனவும், எதிர்காலங் குறித்த பு, கு என்பனவும், அம் ஆம் எனப் பால்காட்டுவனவும், இவ்வாறு வருவன பிறவும் ஆம். ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுநவும்’ என்பது அவ்வேற்றுமைப் பொருளிடத்து உருபாகி நிற்குஞ் சொற்களும் என்றவாறு. அவையாவன ஐ, ஒடு, கு முதலிய, இவையும் இடைச்சொல் எனக் குறிபெற்றன. ‘அசைநிலைக் கிளவியாகி வருநவும்’ என்பது பொருள்பட நில்லாது அசைநிலையாகி நிற்பனவும் எ - று. ‘இசைநிறைக்கிளவி யாகிவருநவும்’என்பது அசைநிலைக் கிளவி போலப் பிரிந்து நில்லாது, ஒரு சொல்லோடு ஒற்றுமைப்பட்டு இசை நிறைத்தற் பொருட்டாகி நிற்பனவும் எ - று. ‘தத்தங் குறிப்பிற பொருள்செய் குநவும்’ என்பது தத்தங் குறிப்பினாற் பொருள் உணர்த்துவனவும் என்றவாறு. ‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும்’என்பது குறிப்பினால் வருதலின்றிப் பொருத்தம் இல்லாத விடத்துப் பொருள் உணர்த்துவனவும் என்றவாறு. ‘அப்பண்பினவே நுவலுங்காலை’ என்பது அவ்வியல்பினையுடைய சொல்லுங் காலத்து, எ - று. தத்தங் குறிப்பின் என்பதற்குச் சார்ந்த சொல்லின் குறிப்பினான் எனவும், ஒப்பில்வழி என்பதனை ஒரு சொல்லோடு பொருத்த மின்றித் தனி வந்துழி எனவும் பொருள் உரைப்பினும் அமையும். அஃது அற்றாக, ஒப்பில்வழி என்பதற்கு ஒக்கும் என்னுஞ் சொல்வாராத உவம உருபெனப் பொருள் உரைப்பவாலெனின். 1ஒப்பினானும் பண்பினானுமென்--றப்பாற் காலங் குறிப்பொடு கொள்ளும் என்றமையானும், போல, அன்ன, ஏய்ப்ப, உறழ என்பன சாத்தன் புலி போலும், எனவும் புலி போலப் பாய்ந்தான் எனவும், புலி போன்ற சாத்தன் புலிபோலுஞ் சாத்தன் எனவும், இவ்வாறு பிறவும், முற்றும் வினையெச்சமும், பெயரெச்சமுமாகி வருதலினாலும் அவை யெல்லாம் வினைக்குறிப்பென்று கொள்க. அவற்றுள், ‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந’ எழுத்ததி காரத்துக் கூறப்பட்டன. ‘வினைசெயல் மருங்கிற் காலமொடு வருந வினையியலுட் கூறப்பட்டன. ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’ வேற்றுமை யோத்தினுட் கூறப்பட்டன. ஏனை நான்கும் ஈண்டு ஓதப்படுகின்றன. (2)
1. வினை. சூ.16.
|