மன் என்னும் இடைச்சொல்லின் பொருள்

249.

கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்(று)
அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே.

ஈண்டு உரைக்கப்படுகின்ற இடைச்சொல் நான்கும் பொருள் புணர் இடைச்சொல்லும், பொருள் புணரா இடைச்சொல்லும் என இருவகைப்படும். அவற்றுள்,

பொருள் புணர் இடைச்சொல் லாமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். கழிந்தது என்னும் பொருண்மையும், ஆம் என்னும் பொருண்மையும், எஞ்சிய இசையான் உணரும் பொருண்மையும் உணரவரும்: மன் என்னுஞ் சொல், எ - று. மன் மன்னை என நின்றது.

எ - டு.சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே (புறம்-235) என்புழி, மன் கழிந்தது என்னும் பொருள்பட நின்றது. ‘புதுமலர் அணிய வின்று வரி, னதுமனெம் பரிசி லாவியர் கோவே.’ (புறம்-147) இதனுள் மன் என்பது ஆம்என்பது குறித்து நின்றது. கூரியதோர் வாண் மன் என்றவழித், திடமின்று என்றானும், வெட்ட வல்லார் உளராயின் என்றானும் ஒழிந்த சொல்லினான் உணரும் பொருள்பட்டது.

(4)