மேல் ஐயப்பட்ட பொருள் துணியப்பட்டவழிச் சொல்
நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். துணியப்பட்ட பொருளின் வேறாகிய பொருட்கண் வரும் அன்மைக் கிளவி, துணியப்பட்ட பொருளைச் சுட்டலும் உரித்தென்று சொல்லுவர் புலவர், எ - று.
தன்மை என்பதனான் அப்பொருட்கு இயல்பு என்பது பெற்றாம். பெறவே துணியப்பட்ட பொருளாயிற்று. வேறிடத்து அன்மைக்கிளவி தன்மை சுட்டலும் உரித்தெனக் கூட்டுக. உம்மை எதிர்மறை யாதலால் சுட்டாமை பெரும்பான்மை.
எ - டு. குற்றியல்லன் மகன்; மகன் அன்று குற்றி; பெண்டாட்டி அல்லன் ஆண்மகன்; ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி; ஒன்றல்ல பல; பலவன்று ஒன்று இவை துணியப்பட்ட பொருளைச் சுட்டி வந்தன. குற்றியன்று மகன்: மகன் அல்லன் குற்றி; பெண்டாட்டியல்லள் ஆண் மகன்: ஆண்மகன் அல்லன் பெண்டாட்டி; ஒன்றன்று பல; பலவல்ல ஒன்று இவை துணியப்படாத பொருளைச்சுட்டி வந்தன.
குற்றியல்லன் மகனே எனத் தேற்றேகாரங் கொடுத்துழி அன்மை துணியப்பட்ட பொருளைச் சுட்டில், குற்றி நின்று வற்றும் ஆதலால், அன்மைக்கிளவி அல்லாத பொருளைச் சுட்டுதல் ஆசிரியர் மதமென்று கொள்க.
(25)