தில் என்னும் இடைச்சொல்லின் பொருள்

250.விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்(று)
அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே.

இதுவும் அது.

இ - ள். விழைவுப் பொருளையும், காலப்பொருளையும், ஒழியிசைப் பொருளையும் உணரவரும்: தில் என்னுஞ் சொல், எ - று.

எ - டு. 1"அரிவையைப் பெறுகதில் லம்ம யானே." இது விழைவு பற்றி வந்தது. 2"பெருங்காட்டு கண்ணிய பருங்கோட்டு ஈமம், நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம், பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பிற, வெள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையும் தீயுமோரற்றே." இதனுள் ஈமம் புகுதல் நுமக்கு அரிதாகுக. எமக்கு இக்காலத்துப் பொய்கையோடு ஒக்கும் என்றமையாற் காலங் குறித்தது. 3"வருகதில் லம்மவெஞ் சேரிசேர." வந்தாலிவ்வாறு செய்வன் என்னும் ஒழியிசை குறித்து நின்றது.

(5)


1. குறுந்--14.

2. புறம்.246.

3. அகம்--276.