இதுவும் அது இ - ள். அச்சப் பொருண்மையும், பயனின் றென்னும் பொருண்மையும், காலப் பொருண்மையும், பெரிதென்னும் பொருண்மையும் பற்றி வரும்: கொன் என்னுஞ் சொல், எ - று. எ - டு. கொன் முனை யிரவூர் போல (குறுந்-91.) என்பது அச்ச முணர நின்றது. கொன்னே கழிந்தன் றிளமையும் (நாலடி-55.) என்புழிப் பயனின்மை யுணர நின்றது. கொன் வரல் வாடை என்ற வழிக், காலத்து வருகின்ற வாடை எனக் கால முணர நின்றது. கொன்னூர் துஞ்சினும் (குறுந்-138.) என்றவழிப், பெருமையுணர நின்றது. இம்மூன்று சொல்லும் பெயர் வினையை யொட்டி வாராது தனிவந்து ஒப்பில் வழியாற் பொருளுணர்த்தினமையான், ஒப்பில் வழியாற் பொருள் செய்தன. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க. (6)
|