‘ஓ’ என்னும் இடைச்சொல்லின் பொருள்

253.

பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப ஓகா ரம்மே.

இதுவும் அது

இ - ள். பிரிநிலை முதலாக ஓதப்பட்ட ஆறிடமும் என்று சொல்லுவார்: ஓகாரமாகிய இடைச்சொல் பொருள் உணர்த்துமிடம், எ - று.

எ - டு. பிரிநிலையாவது பிறபொருளினின்றும் பிரித்தமை தோன்ற வருவது. 1கானங் காரெனக் கூறினும், யானோ தேறேனவர் பொய் வழங் கலரே, அவரோ வாரார் எனவரும். எல்லாரும் தேறினும் யான் தேறேன், எல்லாரும் வரினும் அவர் வாரார் எனப் பிரிநிலைப் பொருண்மை தோன்றியவாறு கண்டுகொள்க.

வினா என்பது வினாவுதற் பொருண்மேல் வரும். அதுவோ? உண்டாயோ? எனவரும்.

எதிர்மறையாவது தன்னாற் சொல்லப்பட்ட பொருளின் மாறுபட்டு வந்தது. உண்ணேனோ, வாரேனோ என்றவழி உண்பல், வருவல் என்னும் பொருள்பட்டது.

ஒழியிசையாவது தன்னாற்சொல்லப்பட்ட பொருளன்றி மற்றொரு பொருளுங் கொள்ள நிற்பது. செய்கையோ செய்தான் என்ற வழிப், பின்பும் இவ்வாறு செய்திலன் என்னும் பொருளுங் குறித்து நின்றவாறு கண்டுகொள்க.

தெரிநிலை என்பது ஒருபொருளை ஆராயும் நிலைமைக்கண் வருவது. திருமகளோ அல்லள், நாமகளோ வல்லள், இவள் யாராகும் எனவரும்.

சிறப்பென்பது பொருளின் உயர்வு குறித்து நிற்கும், கானகநாடனை நீயோஒ பெரும எனவரும். அஃதேல் எழுத்ததிகாரத்து 2ஓகாரவீற்றுள் ஐயமென்றும் ஓர் ஓகாரம் ஓதினாராலெனின், அது தெரிநிலைக்கண் அடங்கும் என்பதூஉமொன்று.

வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனால், ஆண்டு மாறுகொள் எச்சமும், வினாவும், ஐயமும் என ஓதப்பட்டவற்றுள் வாராததுங் கொள்ளப்படும். ஒருவனோ, ஒருத்தியோ தோன்றுகின்றார் என வரும்.

(8)


1. குறுந். 29.

2. சூ. 290.