ஏ என்னும் இடைச்சொல்லின் பொருள்

254.

தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே.

இதுவும் அது

இ - ள். தேற்றம் முதலாக ஐந்து பகுதிய: ஏகார இடைச் சொல், எ - று.

எ - டு. அவனேஎ செய்தான் என்பது துணிவுகுறித்த வழித், தேற்றேகாரமாம், ஈண்டு அளபெடைவரும். வினாக்குறித்தவழி, வினாவே காரமாம். யானே வந்தேன் என்றவழிப், பிறர் கூடலின்றியே எனப் பொருள் படுதலிற் பிரிநிலையேகாரமாம். எண்ணுக்குறித்து வரும். 1(சொல்லே குறிப்பே ஆயிரண்டெச்சம்...............) ஈற்றசை என்பது சொல்லின் இறுதிக்கண் அசைநிலையாகி நிற்பது. 2கடல்போற்றோன்றல காடிறங்தோரே எனவரும்.

அஃதேல், எழுத்ததிகாரத்துள் 3மாறுகோள் எச்சமும் வினாவும் எண்ணும் என ஏகார ஈறு ஓதினார், அவற்றுள் மாறுகொள் எச்சம் ஈண்டு ஓதாதது என்னை யெனின், 4வன்புற வரூஉம் வினைவுடை வினைச்சொல், எதிர்மறுத்து உணர்த்துதற் குரிமையுமுடைத்தே என்றாராகலின் அது வினாவினுள் அடங்கும்; அன்றியும் வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனானுங் கொள்க. யான் வைதேனே என்றவழி வைதிலேன் என்னும் எதிர்மறைப்பொருள் பட்டது.

இவை மூன்று சொல்லும் பெயரோடு ஒட்டுப்பட்டு நின்று தத்தங் குறிப்பினாற் பொருள் உணர்த்தின. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க.

(9)


1. இத்தொடர் சிதைந்துளது.

2. அகம். 1.

3. சூ. 275.

4. வினை சூ. 47.