வண்ணச் சினைச் சொல் மயங்காமை நடைபெற்றியலும் எனவே, வண்ண முதற்சொல் மயங்கியல்லது நடவாதென்ற வாறாம்.
இதனாற் பெற்ற பொருள் என்னையெனின், பொருட்கு உளதாகிய பண்பும், சினையும், பொருளோடு அடுத்துக் கூறக் கருதுவானாயின், பொருண்மேற் செல்லாது சினைமேற் செல்லும் என்பது அறிவித்தற் கென்க.
எ - டு. செங்கால்நாரை : வண்ணம் சினைமேலேறி முதலொடு முடிந்தது. கருங்கோட்டியானை எனப் பண்பினை முதலோடு அடுத்துக் கூறக் கருதுவானாயின், கருமை யானையின் மேற்செல்லாது கோட்டின் மேற் செல்லுதலின் இம்முறை நடைபெறாததாயிற்று.
வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், வடிவு முதலாய பண்புங் கொள்ளப்படும்.
எ - டு. சிறுகண்யானை. பிறவும் அன்ன.
அடையென்று பொதுப்படக் கூறியவதனால் ஒரு பொருண்மே லடை யிரண்டு வருதலுங் கொள்க. கருநெடுங்கூந்தற் காரிகை எனவரும்.
முறை மயங்காமை என்றதனால், மயங்குமாயின், குறித்த பொருண் மேற் செல்லா தென்க.
எ - டு. பெருந்தலைப் புல்லார் நல்லா(ர்) என்றவழி, பெருந்தலை யென்பது புல்லோடு சார்ந்து வருதலிற் சொல்லுவான் குறிப்பு வேறாயினும் 1அதன்மேற் செல்லாதாயிற்று.
‘கவிசெந் தாழிக் குவிபுறத்திருந்த-செவிசெஞ் சேவலும்’ (புறம். 238) என முறை மயங்கி வந்ததால் எனின், ஆண்டுச் செஞ்செவி என்பது மொழிமாறி நின்ற தென்க.
(26)
1. குறிப்புள் ஒன்றாயினும்.