இயற்பெயர் முன்வரும் ‘ஆர்’ என்பது அசைநிலையாதல்

267.

1இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே
அசைநிலைக் கிளவி ஆகுவழி யறிதல்.

அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இயற்பெயர் முன்னர் வரும் ஆர் என்னும் இடைச் சொல் ஒருமைப் பொருண்மேல் வரினும், பலர்க்குரித்தாகிய எழுத்தினையுடைய வினையொடு முற்றுப் பெறும்: அது அசை நிலைக்கிளவி ஆகுமிடனறிந்து கொள்க, எ - று.

வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனால் பிறபெயர்க் கண்ணும் என்பன கொள்க.

“பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே” என்ற உம்மை எச்சமாகலான், ஒருமையான் வரவும் பெறும் என்றவாறு.

இதனானே, இடைச்சொற்பற்றிவரும் பால் வழுவும், திணை வழுவும் அமைத்தவாறாயிற்று.

எ - டு. சாத்தனார், சாத்தியார், நம்பியார், நங்கையார், முடவனார், முடத்தியார், தாயார், தந்தையார், கிளியார், மயிலார் என்பன ஒருமையுணர நின்றனவாயினும், வினையோடு வருங்கால் வந்தார் எனவரும். நம்பியார் வந்தான், நங்கையார் வந்தாள் என இவ்வாறு வருதற்கேற்பனவுங் கொள்க. 2“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்” என்பதனுள் அடங்காதோ எனின், ஆண்டு உரைத்த விடையே ஈண்டும் உரைக்க.

ஆர் என்பது இடைச்சொல்லாயின், இப்பெயருடையார் பலர் வந்துழிக் கூறுமாறு என்னை யெனின், அதனானே யன்றே மார் என்பது வேறு எடுத்தோதல் வேண்டிற்று. 3“எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே” என்புழி, ஆர் அசைநிலையாயிற்று.

(22)


1. இச்சூத்திரத்தை இரு சூத்திரமாகக் கொள்வர் ஏனை உரையாளர்கள்.

2. கிளவியாக்கம். 27.

3. மொழிமரபு. 28.