அசைநிலையும் இசை நிறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஏ என்னும் சொல்லும், குரை என்னும் சொல்லும் இசை நிறைத்தலாகியும், அசை நிலையாகியும் வரும் அவ்விரண்டு நிலைமையும் உடைய, எ - று. ஈண்டு ஏ என்றமையான் ஓரெழுத்தொரு மொழியாகிய உயிரெழுத்தே கொள்ளப்படும். முன் கூறப்பட்ட ஏகாரம் மொழிக்கு ஈறாகிவருதலின், உயிர்மெய்யென்று கொள்ளப்படும். இசை நிறையாவது இசை நிறைத்தற்பொருட்டு ஒருசொல்லோடு ஒட்டிவரும், அசை நிலையாவது தனிவரும். ஏ ஏ இவளொருத்தி பேடியோ வென்றார் என்றவழி, ஏ என்பது இசை நிறையாயிற்று. ஏ தெளிந்தேம்யாம் என்பது அசைநிலையாயிற்று. அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. (புறம். 5), சேர்ந்த சினையிளங் குரைய வாயினும் என்பன இசைநிறை. நல்குர வென்னு மிடும் பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். (குறள். 1045.) இது அசை நிலை. (23)
|