பால் வழுவமைதி

27.

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.

ஒருசார் பால்வழுவும் திணைவழுவும் அமைத்தலை நுதலிற்று.

இ - ள். ஒருவரைச் சொல்லும் பன்மைச் சொல்லும் ஒன்றனைச் சொல்லும் பன்மைச் சொல்லும் இலக்கண மருங்கிற் சொல் நெறியல்ல, வழக்கின் ஆகிய உயர்சொற்கிளவி, எ - று.

உயர் சொற் கிளவி-இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.

எ - டு. அவர் வந்தார் எனவரும். ஒருவனையும் ஒருத்தியையும் ஒன்றினையும் இவ்வாறு கூறுதல் வழுவாயினும், உயர்வுகுறித்துச் சொன்னமையான் அமைதியாயிற்று.

‘இயற் பெயர்முன்ன ராரைக் கிளவி-பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே’ (இடையியல் 22.) என்புழியடங்காதோ எனின் ஆண்டு, நம்பி, நங்கை, சாத்தன் என்னும் பெயர் தானே பால் காட்டுதலான் அதன்மேல் ஓர் இடைச்சொல்லாயிற்று, ஈண்டுப் பன்மைச் சொற்றானே ஒருமைக்கு வருதலின் அடங்காதாயிற் றென்க.

வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், ஒரு பசுவை எம் அன்னை வந்தாள் எனவும், பெருங்கொல்லன், பெருவண்ணான் எனவும் வருவனவுங் கொள்க.

(27)