அம்ம என்பது அசைநிலையாதலேயன்றிப் பொருள் படுவதும்
உண்டு எனல்

272.அம்மகேட் பிக்கும்..

இதுவும் அசைநிலைச்சொல் பொருள் படுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அம்ம என்னும் சொல் அசைநிலை யாகலேயன்றிக் கேள் என்னும் பொருளும் படும், எ - று.

எ - டு. ‘அம்ம வாழி தோழி’ (ஐங்-31) என்றவழிக் கேள் என்னும் பொருள் குறித்து நின்றது. ‘உண்டா லம்மவிவ் வுலகம்’ (புறம்-182.) என்பது அசைநிலையாகி வந்தது.

அசை நிலை என்பது எற்றாற் பெறுது மெனின், மேல் “அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்” (விளிமரபு-35) என்பதனாற் பெறுதும்.

(27)