ஒளகாரம் அல்லாத பிற உயிரெழுத்துக்கள் பொருள்படுமாறு

277.

ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே
ஆயியல் நிலையுங் காலத் தானும்
அளபெடை யின்றித்
1தனிவருங் காலையும்
உளவென மொழிப பொருள்வேறு படுதல்
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்.

ஒருசார் இடைச்சொற் பொருள் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இரண்டு மாத்திரை யாகி யொலிக்கும் உயிர்களுள் இறுதியாகிய ஒளகாரம் அல்லாத உயிர்கள் மேற்கூறியவாறு போல இரட்டித்து வருங் காலத்தினும், அளபெடை பெற்று வருங் காலத்தினும், தனிவருங் காலத்தினும் பொருள் வேறுபடுதல் உள என்று சொல்லுவர் ஆசிரியர். அவை ஒரு பொருள் உணர்த்தும் வழி, ஓசையானும், குறிப்பானும் பொருள் உணர்த்தும், எ - று.

எ - டு. அவையாவன:- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, என்பன. ஒருவன் தகுதியல்லாத செய்த வழியும், அரியன செய்த வழியும், ஆ, அ ஆ என்ப. வியப்புள வழியும், துன்பமுள வழியும் ஆ, அ என்ப. தமக்கு இசைவில்லாதது ஒன்றை ஒருவன் சொன்னவழி, அதனை மறுப்பார் ஆ என்ப. ஈ என்றவழி அருவருத்தலை உணர்த்தும். ஊ உ இசைவை உணர்த்தும். “ஏ ஏ இஃதொத்தன்” (கலி - 62.) என்றவழி, இகழ்ச்சியை யுணர்த்தும். ”ஏ எ என இறைஞ்சி யோளே” என்ற வழி, நாணங்குறித்து நின்றது. ஐ ஐ என்ற வழி, இசைவை உணர்த்தும். “ஓ ஓ உவமை உறழ்வின்றி ஒத்ததே” 2என்றவழி; மிகுதியை உணர்த்தும்.

ஓ என்றவழி இசைவையும், இரக்கத்தையும் உணர்த்தும், ஓ ஒ என்பது விலக்குதலை உணர்த்தும். பிறவும் இவ்வாறு இரட்டித்தும், அளபெடுத்தும், தனி வந்தும் பொருள் வேறு படுவன வந்தவழிக் கண்டு கொள்க.

அஃதேல், ஏவுங் குரையும் என மேல் ஓதவேண்டியதென்னை? அதுவும் இதனுள் அடங்குமாலெனின், ஆண்டுப் பொருளுணர்த்தாநிலையைக் கூறினார். ஈண்டுப் பொளுணர்த்தும் நிலைமை கூறினார் என்க.

(32)


1. ‘தான்வரும்’ என்பதும் பாடம். பிற உரையாசிரியர்கள் இப்பாடமே கொண்டனர்.

2. களவழி. 36.