ஒருசார் 2வினைச்சொற்கண் இடவழுக்காத்தலை நுதலிற்று.
இ - ள். செலவு, வரவு, தரவு, கொடை யென்னும் தொழிற் கண் நிலைபெறத்தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கையென்னும் அம்மூன்றிடத்தும் உரியவென்ப ஒருசாரார். அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிருகிளவியும் தன்மை முன்னிலை யென்னும் இரண்டிடத்தினும் வரும்; ஏனையிரண்டும் படர்க் கைக்கண் வரும், எ - று.
எ - டு. எனக்குத் தந்தது; எனக்கு வந்தது; நினக்குத் தந்தது; நினக்கு வந்தது; அவர்க்குச் சென்றது; அவர்க்குக் கொடுத்தது எனவரும்.
இந்நான்கு சொல்லும் மூன்றிடத்தும் வரும் என்பார் உதாரணங்காட்டுமாறு:--எனக்குச் சென்றது; எனக்குக் கொடுத்தது; நினக்குச் சென்றது; நினக்குக் கொடுத்தது; அவர்க்குத் தந்தது; அவர்க்கு வந்தது எனக் காட்டுவர்.
இவற்றுள் கொடுவென்பதனை ‘கொடுவென் கிளவி படர்க்கை யாயினும் - தன்னைப் பிறன்போற்கூறுங்குறிப்பில் - தன்னிடத் தியலும் என்மனார் புலவர்’ (எச்-49) என எடுத்து வழுவமைக்கின்றார் ஆகலானும், பிறவும் இத்துணைச் சிறப்பில வாதலானும் இலக்கண வழக்கு மேற்காட்டப்பட்ட ஆறுதாரணமுமே. ஏனைய ஆறும் ஒருமுகத்தான் வழுவமைத்தவாறாகக் கொள்க.
(28)
1. இச்சூத்திரத்தினை இளம்பூரணர் முதலியோர் முச்சூத்திரங்களாகக் கொள்வர்.
2. வினைச்சொற்கு இலக்கணம் உணர்த்தலை. (இ. ஏ.)