எண்ணும்மை தொக்கு வருதல்

287.உம்மை எண்ணின் உருபுதொகல் வரையார்.

எண்ணும்மைக்கு உரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உம்மையான் எண்ணப்பட்ட பொருளின்கண் வரும் உருபாகிய உம்மை ஒரோவிடத்துத் தொகுதலும் நீக்கார், எ - று.

எனவே, சொற்றொறும் உம்மை கொடாக்காலும் உம்மை எண்ணாகும் என்றவாறாம்.

எ - டு. “இயங்குபடை யரவ மெதிர்பரந் தெடுத்தல், வயங்க லெய்திய பெருமை யானும், கொடுத்த லெய்திய கொடைமை யானும்” (புறத்திணை - அ) என உம்மை ஒரோவழித் தொக்கு நின்றது. இவ்விலக்கணம் எண்ணும்மைக்கே யுரித்து.

(42)