எண்ணிடைச் சொற்கள் வினையொடும் வருதல்

289.

வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா
நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே.

இதுவும் அது

இ - ள். மேற் சொல்லப்பட்ட எண்ணின் வேறுபாடெல்லாம் வினையோடு நிற்பினும் எண்ணுநிலை திரியா; ஆண்டு அவற்றவற்றியல்பு ஆராய்தல் வேண்டும், எ - று.

எனவே ஒரு முடிபுடையவல்ல; தொகை பெற்றும் பெறாதும் வரும் என்றவாறாம்.

எ - டு.“வளிநடந் தன்ன வாஅய்ச்செலல் லிவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரின ரெனாஅக்
கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றின ரெனாஅ
உருமுரன் றன்ன வுட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றிய ரெனாஅ
மண்கெழு தானை யொண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே.”

(புறம்-197)

என்புழி, வினைக்குறிப் பெண்ணிவந்து தொகைபெறாது நின்றது. “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும், பேணாமை பேதை தொழில்.” (குறள்-833) இதுவும் தொகைபெறாது வந்தது. தொகை பெற்று வந்தன வந்தவழிக் கண்டுகொள்க.

(44)