எடுத்தோதப்பட்ட இடைச்சொற் கெல்லாம் புறனடை
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்ட இடைச் சொற்களெல்லாம் தனித்தனியே இதற்கு இது பொருளென எடுத்து உணர்த்தப்பட்டனவாயினும், வினையோடும், பெயரோடும் குறிக்கப் புலப்பட்டு மற்றொரு வேறுபாட்டனவாகி வரினும், அவ் வேறுபாடு ஆராய்ந்து அதுவும் அதற்கு இலக்கணமாகக் கொள்க, எ - று.
எ - டு. “ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல், தத்த மரபிற்றோன்றுமன் பொருளே,” என்றவழி, மன் அசைநிலையாயிற்று.
“உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தா அங்-கறப்பயனுந் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்” |
(நாலடி-38) |
என்பதனுள், இசைநிறை யாயிற்று. “கான்கெழு நாடர் படர்ந்தோற்குக் கண்ணும் படுமோ என்றிசின் யானே” என்றவழி, உம்மை அசைநிலையாயிற்று. “தேவரே தின்னினும் வேம்பு” (நாலடி-112) என்றவழி, ஏகாரம் சிறப்புக் குறித்து நின்றது. மழைக்குறி கண்டு மழை பெய்யும் போலும் என்றவழிப், போலும் என்றது ஐயங் குறித்து நின்றது. “தேவாதி தேவனவன் சேவடி சேர்து மன்றே.” (சிந்தா-1.) என்றவழி அன்றே என்பது முழுதும் அசைநிலையாயிற்று. “சென்றீ பெருமநிற்றகைக்குநகர் யாரே.” (அகம்-46) என்றவழி, ஏகாரம் ஈற்றசையாயிற்று. “குரை கழல்” என்றவழிக், குரை என்பது ஒலிப் பொருண்மை உணர்த்திற்று. பிறவும் இவ்வாறு வருவன வெல்லாம் இதுவே ஓத்தாகக்கொள்க.
(46)