இதுவும் அது

292.கிளந்த வல்ல 1அன்ன பிறவும்
கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே.

இது இடைச் சொற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். எடுத்தோ தப்பட்ட இடைச்சொலன்றி அத்தன்மைய பிறவுமாகி வருவனவும் இசைநிறை யசைநிலையாகி வருவனவும் பொருள்படுமாறு அறிந்துகொள்க, எ - று.

எ - டு. அவற்றுட் சில வருமாறு ‘குன்றுதொ றாடலும் நின் தன் பண்பே. (முருகாற்-217) என்றவழிக் குன்றுதொறு என்பது குன்று பல என்னும் பொருண்மை உணர நின்றது. ‘சிறிது தவிர்ந் தீக மாளநின் பரிசிலர்.’ (மயிலை-ப-ம்-299.) என்ற வழி, மாள என்பது அசைநிலையாயிற்று. ‘பிரியின் வாழா தென்போ தெய்ய’ (ஐங்குறு-) என்றவழி, தெய்ய என்பது அசைநிலை யாயிற்று. ‘எனவாங் கொள்ளழற் பரந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.’ என்றவழி, எனவும், ஆங்கும் அசைநிலையாயின. “அஞ்சுவ தோரு மறனே ஒருவனை, வஞ்சிப்பதோரு மவா” (குறள்-366) என்றவழி, ஓரும் என்பன அசைநிலை யாயிற்று. ‘செலியரத்தை நின்வெகுளி என்றவழி, அத்தை அசைநிலையாயிற்று.. “அரும்பெற லுலக நிறைய--விருந்து பெற்றனராற் பொலிக நின் புகழே.” (புறம்-62) என்றவழி, ஆல் அசைநிலை யாயிற்று. ‘தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங், கடிநிலை யிலவே பொருள் வயினான’ (வேற்றுமைமயங்-10) என்றவழி, ஆன அசைநிலையாயிற்று. ‘செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின்-கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே’ (கலி-7.) என்றவழி, யாழ அசைநிலையாயிற்று. பிறவும் அன்ன.

(47)

இடையியல் முற்றும்.


1. வேறுபிறதோன்றினும்--என்பது பிற உரையாசிரியர்கள் கொண்ட பாடம்.