இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உரிச்சொல் ஓத்து என்னும் பெயர்த்து: உரிச்சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர்.
உரிச்சொல் என்பது யாதோ எனின், ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது. அதனானேயன்றே, ஒரு சொற் பலபொருட் குரிமை தோன்றினும், பலசொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும் என ஓதுவாராயினர்.
எழுத்ததிகாரத்துள் இதனைக் 1குறைச்சொற் கிளவி என்று ஓதினமையால், வடநூலாசிரியர் தாது என்று குறியிட்ட சொற்களே இவையென்று கொள்ளப்படும்: அவையும் குறைச்சொல்லாதலான்.
அஃதேல், தொழிற் பொருண்மை உணர்த்துவன எல்லாம் இதனுள் ஓதினாரோ எனின், வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (சூ.2.) என்றா ராகலின், வழக்கின்கட் பயிற்சி இல்லாத சொற்கள் ஈண்டு எடுத்து ஓதப்படுகின்றன என்க.
தொழிலாவது வினையும் வினைக் குறிப்பு மாதலின், அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன ஈண்டுக் கூறப்படுகின்றன. இதன் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், உரிச்சொற் கெல்லாம் உரிய தோர் பொது இலக்கணமும், அவற்றிற்குப் பொருளுணர்த்துந் திறனும் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். “உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை என்பது உரிச்சொல் ஆகிய சொல்லை விரித்து உரைக்குங் காலத்து, எ - று.
“இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி” என்பது சொல்லானும், குறிப்பானும், பண்பானும் புலப்பட்டு, எ - று.
சொல்லாற் புலப்பட்டது உறு என்பது, இதனின் அஃதுறும் என்ற வழி, மிகும் என்னும் பொருள் புலப்பட்டது.
குறிப்பாற் புலப்பட்டது - கறுத்தான் என்பது, ஒருவன்மாட்டுக் கருமையாகிய நிறத்தைக் குறியாது, அவனது வெகுட்சியைக் குறித்தலிற் குறிப்பாயிற்று.
பண்பாற் புலப்பட்டது - வெகுட்சிக்குக் கண்சிவக்கும் என்பது கண்ணின் சிவப்பு அது சிவத்தற்குக் காரணமாகிய வெகுட்சியின்மேல் வந்தது.
இவையிற்றை வடநூலாசிரியர் முக்கியம், இலக்கணை, கௌணம் என்ப.
சொற்பொருள்படும்வழிச் சொல்லானும், குறிப்பானும், குணத்தானும் பொருள்படும் என்பதூஉம், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச்சொல் இம் மூவகையானும் பொருள் வேறுபடும் என்பதூஉம் கூறியவாறாம்.
‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’ என்பது உரிச்சொல்லாகிய உருபு பெயரின்கண்ணும் வினையின்கண்ணும் தடுமாறி, எ - று.
அவை தடுமாறுங்கால் பெயர் வினைகளைச் சார்ந்தும், அவற்றிற்கு அங்கமாகியும் வரும். ‘உறுவளி’ என்பது பெயரைச் சார்ந்து வந்தது. ‘உறக்கொண்டான்’ என்பது வினையைச் சார்ந்து வந்தது. ‘உறுவன்’ என்றவழிப் பெயர்க்கு அங்கமாயிற்று. ‘உற்றான்’ என்றவழி வினைக்கு அங்கமாயிற்று.
‘ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும், பலசொல் ஒரு பொருட் குரிமை தோன்றினும்’ என்பது ஒரு சொல் பல பொருட்கு உரித்தாகித் தோன்றினும், பல சொல் ஒரு பொருட்கு உரித்தாகித் தோன்றினும், எ - று.
ஒருசொல் ஒருபொருட் குரித்தாகி வருதல் சொல்லாமன் முடிந்ததாம்.
‘பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்-தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின்’ என்பது உரிச்சொற்கள் தத்தம் மரபினாற் சென்று நிற்குமிடத்து, வழக்கின்கட் பயின்று நடவாத சொற்களைப் பயின்ற சொற்களோடு சேர்த்தி, எ - று.
பயிலாத சொல்லாவன:--உறு, தவ, நனி; பயின்ற சொல்லாவன மிகுதல், உட்கு, உயர்வு என்பன. சார்த்துதலாவது இச்சொற்கள் இச்சொல்லின் பொருள்படும் எனக் கூட்டுதல்.
‘எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’ என்பது யாதானும் ஒரு சொல்லாயினும் பொருள் வேறுபடுத்திக் காட்டுக, எ - று.
தோன்றித் தடுமாறி என்னும் செய்தென் எச்சம் உரிமை தோன்றினும் என்னும் செயின் எச்சத்தினோடு ஒன்றிக், கிளக்க என்னும் வியங்கோளோடு முடிந்தது.
உரிச்சொற் கிளவியை விரித்துரைக்குங் காலத்துச், சொல்லானும் குறிப்பானும், பண்பானும் பொருள் புலப்பட்டுப், பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் உருபு தடுமாறி, ஒருசொற் பலபொருட்கு உரிமையாகித் தோன்றினும், பலசொல் லொருபொருட்கு உரிமையாகித் தோன்றினும், தத்தம் மரபிற் சென்று நிற்குமிடத்துப், பயிலாத சொற்களைப் பயின்ற