வெளிப்படையல்லா உரிச்சொற்களே இவ்வியலில்
கூறப்படும் என்றல்

294.

வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.

ஈண்டு ஓதுகின்ற உரிச்சொல் இவை என்பது உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். வழக்கின்கண் எல்லாரானும் அறியப்பட்ட சொல் ஈண்டு எடுத்து ஓதவேண்டா. அறியப்படாத உரிச்சொன்மேலன: வருகின்ற சூத்திரங்கள், எ - று.

எ - டு. வெளிப்படு சொல்லாவன உண்டல் என்பதற்கு அயிறல், மிசைதல் எனவும்; உறங்குதல் என்பதற்குத் துஞ்சல் எனவும்; இணை விழைச்சு என்பதற்குப் புணர்தல், கலத்தல், கூடல் எனவும்; அச்சம் என்பதற்கு வெரூஉதல் எனவும் இவ்வாறு வருவன. இனி வெளிப்பட வழங்காதன கூறப்படுகின்றன.

(2)