அஃறிணையில் இரண்டுபால்

3.ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
றாயிரு பாற்சொல் லஃறிணை யவ்வே.

அஃறிணைச் சொற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஒன்றனையறியுஞ் சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல்லுமென அவ்விருகூற்றுச்சொல், அஃறிணையிடத்த, எ - று.

அஃறிணைப் பொருண்மை, உயிர்ப்பொருள் உயிரில் பொருளெனவும்; உயிர்ப்பொருட்கண், ஆண், பெண் எனவும்; அவை யெல்லாம் பொருள் தொறும் ஒருமையும் பன்மையுமாகியும் பலவகைப்படுமாலெனின், அவையெல்லாம் ஒருமையாயின், வந்தது எனவும், பன்மையாயின், வந்தன எனவும் வழங்கப்படுதலிற் சொன்முடிபு நோக்கிக் கூறினாரென்க. அஃறிணைப் பொருள்பற்றிவரும் பெயர்ச் சொல்லும், வினைச்சொல்லும் இருபகுதியவாமென்றே கொள்ளப்படும்.

(3)