வினாவழு அமைத்தலை நுதலிற்று
இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் யாது என்று சொல்லப்பட்ட அறியாத பொருண்மைக்கண் நிகழும் சொல், அறிந்த பொருட்கண் ஐயந்தீர்தற் பொருட்டு ஆராய்ந்த சொல்லாகலும் உரித்து, எ - று.
உம்மை எச்சவும்மை ஆகலான், ஐயம் அறுத்தலே யன்றி அறிவொப்புக் காண்டற் பொருட்டும் வினாவப்படும் என்றுங் கொள்க.
ஐயம் அறுத்தலாவது, இச்சொற்குப் பொருள் இது என உணர்ந்தான் ஒருதலையாகத் துணிதலாற்றாது, அஃதறிவான் ஒருவனை வினாதல்.
அறிவு ஒப்புக்காண்டலாவது, சொல் இலக்கணம் அறிவான் ஒருவன் அஃது அறிவான் ஒருவனை இதற்குப் பொருள் யாது என வினாதல், பிறவும் அன்ன.
இவ்வாறு அறிந்த பொருளை வினாதல் வழுவாயினும் அமைக என்றவாறு.
(30)