சினைமுதற் சொல்லைச் சொல்லும் முறைமை

31.

இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவி
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்

ஒருசார் செப்பு வழுக் காத்தலை நுதலிற்று.

இ - ள். இத்துணை யென வரையறுக்கப்பட்ட சினைக்கிளவியும், முதற்கிளவியும் தொழிற்படு தொகுதிக்கண் உம்மை பெறல் வேண்டும், எ - று.

எனவே, தொழிற்படாத் தொகை இயல்பாகி வரப்பெறும் என்பது பெறுதும்.

எ - டு. தேவர் முப்பத்து மூவரும் வந்தார்; நங்கை முலையிரண்டும் நல்ல: இவை தொழிற்பட்ட தொகை, தேவர் முப்பத்துமூவர், ஆவிற்கு முலை நான்கு: இவை தொழிற்படாத்தொகை.

“கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு--வதுவை வந்த வன்பறழ்க் குமரி--இருதோள் தோழர்பற்ற” என்புழி உம்மை வந்த தன்றால் எனின் ஆண்டு எஞ்சிநின்றது என்க.

(31)