கதழ்வு, துனைவு என்பவற்றின் பொருள்

313.கதழ்வும் 1துனைவும் விரைவின் பொருளே.

இ - ள். கதழ்வு என்னும் சொல்லும், துனைவு என்னும் சொல்லும் விரைவு என்பதன் பொருள்படும், எ - று.

கதழ், துனை என்னும் சொற்களை இனிது விளக்குதற்குப் பெயராக்கி ஓதினார். மேற் சொல்லப்பட்ட வற்றினும், இனி வருவனவற்றினும் குறைச் சொல்லாகி இவ்வாறு வருவன அறிந்துகொள்க.

எ - டு. ‘கதழ்பரி நெடுந்தேர்’ (நற்றிணை-203); ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்.’ (அகம்-9.)

(21)


1. துனையும் என்பதும் பாடம்.