வார்தல், போகல், ஒழுகல் என்பவற்றின் பொருள்

315.

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள.

இ - ள். வார்தல் என்னும் சொல்லும், போகல் என்னும் சொல்லும், ஒழுகல் என்னும் சொல்லும் நேர்பு என்பதன் பொருண்மையும், நெடுமை என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ - று.

எ - டு. ‘வார்ந்திலங்கு வையெயிற்று’ (குறுந்-14); ‘போகு கொடி மருங்குல்’ இவை நேர்மை. ‘வார்கயிற்றொழுகை’ (அகம்-173);1‘வெள்வேல்விடத்தேரொடு காருடைபோகி,’ ‘மால்வரை யொழுகிய வாழை’ (சிறுபாண்-21). இவை நெடுமை.

(23)


1. பதிற்-13.