செப்பு வழுவமைதி

33.எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்
அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்.

செப்பு வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். யாதானும் ஒருபொருளாயினும் அல்லது என்னும் சொல்லொடு கூட்டி இல்லை எனக் குறித்தான் ஆயின், அவன் வினாவிய பொருள் அல்லாத பிறிதாய பொருளைச் சொல்லுக, எ - று.

எனவே அதனொடு கூட்டிச் சொல்லுக என்றவாறாம். ‘அப்பொருள் அல்லாப் பிறிது’ என்றமையான் அதற்கு இனமாகிய பொருளே சொல்லப்படும்.

பயறு உளவோ வணிகீரே என்றார்க்கு உழுந்தல்லது இல்லை என்க. கொல்லவன் பட்டு உளவோ என்றால் கோசிகம் அல்லது இல்லை என்க.

எனவே அவன் கருத்திற்கேற்று வினாவியபொருளை இல்லை என்னாது, பிறிது ஒன்று கூறுதல் வழுவாயினும், அப்பொருள் பயத்தலின் அமைதியாயிற்று.

(33)