ஒரு பொருண்மேற் பலபெயர் வருவழிச் செப்புவழுக் காத்தலை நுதலிற்று.
இ - ள். ஒரு பொருள்மேல் வரும் இயற்பெயர்ச் சொல்லும், சுட்டுப்பெயர்ச் சொல்லும் வினைகோடற்கு ஒருங்கு இயலுங்காலம் தோன்றின், சுட்டுப் பெயர்ச்சொல்லை முற்படச் சொல்லார்; இயற்பெயர் வழியவாகக் கூறப்படும் என்று சொல்லுவர் புலவர், எ - று.
வழிய எனப் பன்மை கூறியது சுட்டுப்பெயர் பல ஆகலான். இயற்பெயராவன:-சாத்தன், கொற்றன், சாத்தி, கொற்றி என்பன. சுட்டுப் பெயராவன:-அவன், இவன், அவள், இவள் என்பன. இயற்பெயர் என்றாராயினும் வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் ஒரு பொருட்குப் பெயராகிவரும் நிலப்பெயர் முதலாயினவுங் கொள்க. ஒருங்கு இயலுங் காலம் தோன்றின் என்றதனால், ஒருபெயர் ஒருவினையொடு முற்றி நில்லாது பலசொல்லொடு தொடருங் காலத்து இவ்வாறு வருவ தென்று கொள்க.
சாத்தன்வந்தான் அவற்குச் சோறு கொடுக்க. சாத்திவந்தாள் அவட்குப் பூக்கொடுக்க எனவரும். பிறவும் அன்ன.
சுட்டுப்பெயர் முற்கூறின் ஒரு பொருளாதல் தோன்றாதாம்..
(36)