எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தலை நுதலிற்று. இ - ள். மேலைச் சூத்திரத்துப் பிற்படக் கூறப்படும் என்று சொல்லப்பட்ட சுட்டுப் பெயரை முற்படக் கூறுதல் செய்யுட் கண் ஆம், எ - று. | ‘அவனணங்கு நோய்செய்தான் 1ஆயிழாய் வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந்2 தன்னை யலர்கடப்பந் தாரணியின் என்னைகொல் பின்னை யதன்கண் விழைவு.’ |
இதனுள் சேந்தன் என்பதூஉம், அவன் என்பதூஉம் ஒரு பொருள் ஆகியவாறும், சுட்டு முன் வந்துழியும் பொருள் வேறுபடாமையுங் கண்டு கொள்க. அஃது அற்றாக, சுட்டுப் பல ஆதலின் உரிய எனப் பன்மையிற் கூறாதது என்னை யெனின், ஈண்டு அகரச் சுட்டே வருதலின் ஒருமையாகக் கூறப்பட்டது. 3அதனைப் பல் பொருட் கேற்பின் நல்லது கோடல் என்பதனாற் கொள்க. நாயுடைமுதுநீர்க் கலித்த என்னும் அகப்பாட்டினுள் (அகம், 16) கூர் எயிற்றரிவை குறுகினள், செத்தனள், கொண்டனள், நாணி நின்றோள், அணங்கருங் கடவுள் அன்னோள் என ஒரு பொருண்மேற் பல பெயர் சுட்டிக் காலங் காட்டியவாறு காண்க. (37)
1. நோயென்றான். 2. முகமலர்ந். 3. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனாற் கொள்க. (இ.ஏ.) ‘வந்தது கொண்டு’ என்பது முதல் இச்சூத்திரமுடிபுவரை உள்ளன இரண்டாவதேட்டில் இல்லை.
|